• Emergency
    • Apollo Lifeline

    Emergency

      Home General Medicine டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் மலேரியா ஆகிய நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

      டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் மலேரியா ஆகிய நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

      Cardiology Image 1 Verified By Apollo General Physician March 30, 2023

      8652

      கொசுக்களின் மூலம் பரவுகின்ற காய்ச்சல்கள், குறிப்பாக மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளன. முறையான கவனிப்பு வழங்கப்படாமல் போனால் இந்நோய்கள் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

      மலேரியா அனாஃபிலஸ் கொசுவின் மூலம் பரவுகிறது, ஆனால் டெங்குவும் சிக்குன்குனியாவும் ஏடிஸ் கொசுக்களின் மூலம் பரவும் தொற்றுகளாகும். டெங்கு, சிக்குன்குனியா இரண்டுமே பூச்சிகளின் மூலம் பரவுகின்ற வைரஸ் நோய்கள். ஆனால் மலேரியாவானது, வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட கொசுக்களின் மூலம் பரவுகின்ற பிளாஸ்மோடியம் எனும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.

      இந்த மூன்று நோய்களுமே பரவும் அளவைப் பொறுத்தவரைப் பெருமளவு பொதுவான பண்பைக் கொண்டுள்ளன. அந்நோய்களின் ஆரம்பக் கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரி இருப்பதால், அவற்றை வேறுபடுத்தி அறிவது கடினமாகிறது. ஆண்டு முழுவதும் பரவுகின்ற இந்த நோய்களைத் தடுக்க, அவற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

      டெங்கு காய்ச்சல் என்பது என்ன?

      டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுவினால் பரவுகின்ற வைரஸ் நோய்த்தொற்றாகும். DEN-1, DEN-2, DEN-3, DEN-4 ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய நான்கு வைரஸ்களில் ஏதேனும் ஒன்றினால் இந்நோய் தோன்றுகிறது. சில சமயம் மூட்டுகளில் எலும்புகளே உடைவது போன்ற கடுமையான வலியை ஏற்படுத்துவதால், இந்நோய் பிரேக்-போன் ஃபீவர் (Break-bone fever) என்றும் அழைக்கப்படுகிறது.

      டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

      டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் நோயினால் பாதிப்படையும் நபரின் வயதைப் பொறுத்தது. பொதுவாக நோய்த்தொற்றுள்ள கொசு ஒருவரைக் கடித்து 4-7 நாட்களுக்குள் முதலில் காய்ச்சல் ஏற்படும். டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்:

      • அதிக காய்ச்சல் – 105ºF வரை
      • மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி
      • கடுமையான தலைவலி
      • முதலில் மார்புப் பகுதியில் தோன்றி, முதுகு, வயிறு, கைகள், கால்கள், முகம் எனப் பல பகுதிகளுக்கும் பரவுகின்ற தோல் தடிப்பு (ரேஷ்)
      • கண்களுக்குப் பின்புறத்தில் வலி
      • குமட்டல் மற்றும் வாந்தி
      • வயிற்றுப்போக்கு

      டெங்கு காய்ச்சல் உள்ள சில நோயாளிகளுக்கு, அது டெங்கு ஹெமரேஜிக் காய்ச்சலாக (Dengue Haemorrhagic Fever) மாறக்கூடும், இது வைரஸ் நோயின் இன்னும் கடுமையான வகையாகும். இந்த வகை டெங்கு காய்ச்சல் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறுவது மட்டுமல்லாது நோயின் மிக மோசமான நிலையான டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (Dengue shock syndrome) ஏற்பட வழிவகுக்கக்கூடும்.

      • தலைவலி
      • காய்ச்சல்
      • தோல் தடிப்பு (ரேஷ்)
      • உடலில் இரத்தப்போக்கு (உடலில் இரத்தம் கசிதல்)
      • இரத்தப் புள்ளிகள் (ஊதா நிறத் திட்டுக்கள் அல்லது சிவப்பு நிறப் புள்ளிகள், சருமத்தின் அடிப்பகுதியில் கொப்புளங்கள்)
      • மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தக் கசிவு
      • கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்
      • எளிதில் சிராய்ப்புகள் தோன்றுவது

      சிக்குன்குனியா என்பது என்ன?

      ‘சிக்குன்குனியா’ என்ற சொல்லுக்கு ‘குனிந்து நடத்தல்’ என்று பொருள். காய்ச்சலும் மூட்டு வலிகளுமே சிக்குன்குனியாவின் முக்கிய அறிகுறிகளாகும். நோய்த்தொற்று கொண்டுள்ள ‘ஏடிஸ் ஏகிப்தி’ என்ற பெண் கொசு கடிப்பதன் மூலமே சிக்குன்குனியா பெரிதும் பரவுகிறது. இந்தக் கொசு ‘மஞ்சள் காய்ச்சல் கொசு’ என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஒருவரிடமிருந்து பிறருக்குப் பரவக்கூடியதல்ல என்று கருதப்படுகிறது. ஆனாலும், அரிதாக சில சமயம் நோய்த்தொற்று கொண்டுள்ள நபரின் இரத்தத்தைத் தொடுவதால் பிறருக்கும் இந்நோய்த்தொற்று பரவக்கூடும்.

      சிக்குன்குனியாவின் அறிகுறிகள்:

      சிக்குன்குனியாவின் நோயரும்பு காலம் 2-6 நாட்களாகும். பொதுவாக நோய்த்தொற்று எற்பட்டு 4-7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும். பிற வழக்கமான அறிகுறிகள்:

      • அதிக காய்ச்சல் (40 °C அல்லது 104 °F) – இந்தக் காய்ச்சல் இரண்டு நாட்கள் நீடித்து பிறகு சட்டென மறைந்துவிடும்.
      • வைரஸினால் எலும்புத் தண்டுகளில்  அல்லது கைகால்களில் ஏற்படும் தடிப்புகள்
      • பல மூட்டுகளில் வலி (இரண்டு ஆண்டுகள் வரை வலி தொடரும்)
      • தலைவலி, பசியின்மை போன்ற பிற பொதுவான வைரஸ் நோய்த்தொற்று அறிகுறிகள்

      மலேரியா என்பது என்ன?

      மலேரியா என்பது கொசுக்களின் மூலம் பரவுகின்ற, இரத்தத்தில் ஏற்படுகின்ற, உயிருக்கு அச்சுறுத்தலாகின்ற ஒரு கொடிய நோயாகும். இது பிளாஸ்மோடியம் எனப்படுகின்ற ஒட்டுண்ணியின் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் தொற்றுள்ள அனாஃபிலஸ் கொசு மனிதர்களைக் கடிக்கும்போது இந்த ஒட்டுண்ணி பரவுகிறது. மனித உடலில் உள்ள கல்லீரலில் இந்த ஒட்டுண்ணி பெருக்கமடைந்து, பிறகு இரத்தச் சிவப்பணுக்களுக்குள் செல்கிறது.

      மலேரியாவின் அறிகுறிகள்

      மலேரியாவின் அறிகுறிகள், தீவிரமற்ற மலேரியா, தீவிர மலேரியா என இரு வகைப்படும்

      தீவிரமற்ற மலேரியா

      லேசான மலேரியாவில், உஷ்ணம், குளிர்ச்சி, வியர்த்தல் என்ற கட்டங்களில் பின்வரும் அறிகுறிகள் தொன்றும்:

      • குளிர் அல்லது நடுக்கத்துடன் கூடிய குளிர்ச்சியான உணர்வு
      • தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி
      • சிலசமயம் வலிப்பு எற்படக்கூடும்
      • வியர்த்தல், அதன் பிறகுஉடல்  மீண்டும் இயல்பான வெப்ப நிலைக்குத் திரும்புதல், அதன் பிறகு களைப்பு அல்லது சோர்வு எற்படுதல்

      தீவிர மலேரியா

      உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்துள்ளதாக ஆய்வக அல்லது மருத்துவமனைப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்தால், அது தீவிர மலேரியாவாகும்.

      தீவிர மலேரியாவின் அறிகுறிகள்:

      • காய்ச்சல் மற்றும் குளிர்/நடுக்கம்
      • விழிப்புணர்வு பலவீனமடைதல்
      • சுவாசிப்பதில் சிரமம், ஆழ்ந்து சுவாசித்தல்
      • தொடர்ச்சியான உடல் வலிப்பு
      • இரத்த சோகை மற்றும் இயல்பற்ற இரத்தப்போக்கின் அறிகுறிகள் தென்படுதல்
      • உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததாகத் தெரியவருதல் மற்றும் மஞ்சள் காமாலை

      டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் மலேரியாவைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

      டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியாவைப் பரப்புகின்ற ஏடிஸ் கொசு (’பகலில் கடிக்கும் கொசு’ என்றும் அழைக்கப்படுகிறது), பகல் வேளையில் அதிகம் நடமாடக்கூடியது. மலேரியாவைப் பரப்புகின்ற அனாஃபிலஸ் கொசுவோ இரவில் கடிப்பது. ஆக, பகலிலும் சரி இரவிலும் சரி, கொசு கடிக்காமல் தவிர்ப்பதே இந்த நோய்கள் வராமல் தடுக்க நாம் எடுக்கக்கூடிய மிக முக்கிய நடவடிக்கையாகும். இந்நோய்களைத் தடுப்பதற்கான பிற வழிமுறைகள்:

      • கைகளையும் கால்களையும், கொசு கடிக்காதபடி மூடி வைத்திருங்கள்
      • வெளிர் நிற ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்
      • இந்த நோய்களில் ஒன்றோ பலவோ பரவியுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிருங்கள்
      • கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்
      • வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் தடுக்க, கதவுகளிலும் ஜன்னல்களிலும் வலைகளைப் பொருத்துங்கள்
      • கொசு கடியைத் தவிர்க்க படுக்கைகளுக்கு மேல் கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள்
      • வாலிகள், பூந்தொட்டிகள், பேரல்கள் போன்றவற்றில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதன் மூலம், கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு வசதியான இடங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்
      • சுற்றுப்புறத்தில் குப்பைகள் சேராமல், தூய்மையோடு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்

      சந்திப்பை முன்பதிவு செய்ய www.askapollo.com

      Cardiology Image 1

      Related Articles

      More Articles

      Most Popular Articles

      More Articles
      © Copyright 2024. Apollo Hospitals Group. All Rights Reserved.
      Book ProHealth Book Appointment
      Request A Call Back X