Verified By Apollo Pulmonologist January 16, 2021
9845உலகளவில் உள்ள பயோடெக் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்பட்ட சோதனைக் கருவிகளை உருவாக்கி வருவதன் காரணமாக, COVID 19 நோய்த்தொற்று ஏற்படக் காரணமான SARS-CoV-2 (சிவியர் அக்கியூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 (Severe Acute Respiratory Syndrome Coronavirus 2)) வைரஸைக் கண்டறியும் சோதனையின் எண்ணிக்கையும் துல்லியமும் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஆன்டி-பாடி சோதனை (IgG), ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரீஸ் செயின் ரியாக்ஷன் (Reverse Transcription Polymerase Chain Reaction (RT – PCR)) முறை, TrueNat ஆகிய மூன்று சோதனை முறைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறுபட்டவை. ஒவ்வொரு சோதனை முறைக்கும் அதற்கே உரித்தான நிறைகளும், வரம்புகளும், நன்மைகளும், குறைபாடுகளும் உள்ளன.
இன்று வரை, நிகழ்நேர (Real-time) RT-PCR சோதனையே மிகவும் நம்பகமான, துல்லியமான சோதனை முறையாக விளங்குகிறது. எனினும் வைரஸின் தன்மை தொடர்ந்து மாறுவதன் காரணமாக, எந்த ஒரு தனிப்பட்ட சோதனை முறையும் 100% துல்லியமானதாக இருப்பதில்லை.
ஆன்டி–பாடி சோதனை (IgG)
ஆன்டி-பாடி சோதனையை செரலாஜிக்கல் டெஸ்டிங் (serological testing) என்றும் அழைக்கிறோம். உங்கள் இரத்தத்தில் உள்ள ஆன்டி-பாடிகளின் வகையை ஆய்வு செய்வதற்கு மருத்துவர் அல்லது மருத்துவப் பரிசோதனை நிபுணர் இந்தச் சோதனையைப் பயன்படுத்துவார். ஆன்டி-பாடிகள் என்பவை புரத மூலக்கூறுகளாகும். இவை வைரஸ் போன்ற அந்நியப் பொருட்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்நியப்பொருட்களுக்கு எதிராகச் செயல்படுமாறு உங்களது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது.
இரத்தத்தில் எண்ணற்ற ஆன்டி-பாடிகள் உள்ளன. நிபுணரோ செவிலியரோ உங்கள் இரத்த மாதிரியைச் சேகரித்து, அதில் IgM மற்றும் IgG ஆன்டிபாடிகள் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். Ig என்பது இம்மியுனோகுளோபுளின் (immunoglobulin molecule) மூலக்கூற்றைக் குறிக்கிறது
● நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில், SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக IgM ஆன்டி-பாடிகள் உடலில் உருவாகின்றன.
● கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்த பிறகு SARS-CoV-2 வைரஸுக்கு எதிராக IgG ஆன்டி-பாடிகள் உடலில் உருவாகின்றன.
என்சைம் லிங்க்டு இம்மியுனோசார்பென்ட் அஸ்சே (ELISA) என்பது ஒரு வகை ஆன்டி-பாடி சோதனையாகும். குறுகிய காலத்தில் பெரிய பரப்பளவிலான பகுதியில் முதல்நிலை சோதனையைத் திறம்படச் செய்வதற்கு ஏற்ற வகையில் இச்சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்டி–பாடி சோதனை (IgG) முடிவுகள்
ஆன்டி-பாடி சோதனைக் கருவிகள் மூலம் 30-60 நிமிடங்களில் சோதனை முடிவுகளைப் பெறலாம்.
ஆன்டி–பாடி சோதனையின் (IgG) நன்மைகள்
● ஆன்டி-பாடி சோதனை முறையானது குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளைச் சோதனை செய்ய ஏற்றது.
● நோய்த்தொற்றும் விகிதத்தை, அதாவது வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் கணக்கிட உதவுகிறது.
● குறிப்பிட்ட ஜனத்தொகையிலான மக்கள் வைரஸ் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புக்கு இது பயன்படுகிறது.
● நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பாதிக்கின்ற காரணிகளை மதிப்பிடவும் இது பயன்படுகிறது.
ஆன்டி–பாடி சோதனையின் (IgG) குறைபாடுகள்
● இந்தச் சோதனைகளின் பிழை விகிதம் அதிகம். ஆன்டி-பாடி கருவிகள் 30-60 நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகளை வழங்கிவிடும், ஆனால் நாசியிலிருந்து சளி மாதிரியைச் சேகரித்துச் செய்யும் நாசல்-ஸ்வாப் (nasal-swab) சோதனையின் அளவிற்கு இவை துல்லியமாக இருப்பதில்லை.
● IgM ஆன்டி-பாடிகள் உள்ளதைக் கண்டறியும் சோதனைகளின் முடிவுகள் 20 நிமிடங்களுக்குள் கிடைத்துவிடும். அதே சமயம், IgG ஆன்டி-பாடிகள் உள்ளதைக் கண்டறியும் சோதனை முடிவுகள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகக்கூடும். IgM சோதனைகளைவிட IgG சோதனைகளே அதிக நம்பகமானவை.
● பிழையான சோதனை முடிவுகள் – சோதனைகளின் தர உறுதிப்பாடு குறித்து கேள்விகள் எழுகின்றன. இந்தச் சோதனைகள் 100% துல்லியத்தை வழங்குவதோ, அதற்கு உத்தரவாதமளிப்பதோ இல்லை. சில சோதனைக் கருவிகள் மற்றதைவிடச் சிறப்பாகச் செயல்படுகின்றன.
● அறிகுறிகள் இல்லாத நோயாளிகளைச் இந்தச் சோதனைக் கருவி மூலம் சோதனை செய்யும்போது, முடிவுகளின் துல்லியமின்மை அதிகரிக்கவும் செய்கிறது.
RT-PCR சோதனை என்பது பல்வேறு நாடுகள் பயன்படுத்துகின்ற துரிதச் சோதனை முறை (rapid test) என்ற வகையின்கீழ் வருகிறது.
ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரீஸ் செயின் ரியாக்ஷன் (Reverse Transcription Polymerase Chain Reaction (RT – PCR))
பாலிமரீஸ் செயின் ரியாக்ஷன் சோதனை அதிக உணர்திறன் கொண்டது. இந்தச் சோதனையின் அதிக உணர்திறன் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, இன்றுவரை COVID-19 தொற்றைக் கண்டறிவதற்கான மிகத் துல்லியமான சோதனை முறையாக இதுவே கருதப்படுகிறது. இந்தச் சோதனையில் குறிப்பிட்ட நோய்க்கிருமியின் மரபணுக் கூறு உள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. எபோலா (Ebola) வைரஸ் மற்றும் ஜிக்கா (Zika) வைரஸ் போன்ற தொற்றுக் காலங்களில் RT-PCR சோதனைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.
பயிற்சிபெற்ற நிபுணர்கள் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியிலிருந்து சளி மாதிரியைச் சேகரிப்பார்கள். சளி மாதிரியிலுள்ள RNA-ஐ மட்டும் பிரித்தெடுப்பதற்காக, புரதத்தையும் கொழுப்புகளையும் அகற்றக்கூடிய வேதிப்பொருள்களுடன் சளி மாதிரியைச் சேர்த்து வினைக்கு உட்படுத்துவர். பிறகு இந்த RNA ஆனது வைரஸ் DNA ஆக எதிர்த்திசை உருமாற்றம் அடையும் செயல்முறைக்கு உட்படுத்தப்படும். ரியல்-டைம் RT-PCR சோதனையில் வைரஸ் DNA உடன் 35 முழு செயல்முறை சுழற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 3500 கோடி பிரதிகள் உருவாக்கப்படும். இதில் வைரஸ் DNA-இன் பகுதிகள் இருக்கும். வைரஸ் இருக்கும் DNA பகுதிகள் வண்ணமயமாக ஒளிரும்.
RT-PCR சோதனை முடிவுகள்
RT-PCR சோதனைகள் 3 மணிநேரத்திற்குள் துல்லியமான COVID-19 சோதனை முடிவுகளை வழங்க வல்லவை. இறுதி முடிவைத் தயார்செய்ய ஆய்வகங்கள் 6-8 மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.
● RT–PCR சோதனையானது தெளிவான முடிவை வழங்குவது மற்றும் அதிக வைரஸ் உணர்திறன் கொண்டது.
● பிற முறைகளைவிட இதன் துல்லியமும் நுண்மையும் அதிகம்.
● இச்சோதனை முறையில் பிற பொருட்களினால் ஏற்படும் மாசுபாட்டிற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பிழை விகிதமும் குறைந்த அளவே உள்ளது.
● இச்சோதனை மூலம் நோய்த்தொற்றின் தீவிரத்தையும் கண்டறிய முடியும்.
● தற்போது ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றை மட்டுமே இச்சோதனையின் மூலம் கண்டறிய முடியும். இந்தக் குறைபாட்டின் காரணமாக, இச்சோதனை மூலம் வைரஸ் தோன்றும் விதம் பரவும் விதம் பற்றியெல்லாம் மருத்துவர்கள் புரிந்துகொள்வது கடினமாகிறது. இது ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது.
● RT-PCR சோதனைக்கு என்று பிரத்தியேகக் கருவிகள் தேவை. ஆன்டி-பாடி சோதனைக்கு ஒரு கருவி இருந்தாலே போதும், ஆனால் அதுபோல இந்தச் சோதனையை எளிதாகச் செய்ய முடிவதில்லை.
● பெயரத்தகு RT-PCR எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமானால், தவறான உபயோகத்தைத் தவிர்க்கச் சிறப்புப் பயிற்சியும் அவசியமாகிறது.
● இச்சோதனைச் செய்வதற்கு ஆகும் செலவு அதிகம்
TrueNat என்பது, தொடக்கத்தில் காசநோயைக் (TB) கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட, சிப் தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படுகின்ற, பெயரத்தகு இலகுவான RT-PCR சாதனமாகும். TrueNat Beta CoV சோதனையில் வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், SARS-CoV-2 ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் சோதனைகள் மூலம் உங்கள் மாதிரியின் முடிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வழக்கமான RT-PCR சோதனைகளைவிட TrueNat சோதனையில் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்.
● இது PCR அடிப்படையிலான சோதனை, ஆகவே நம்பகமானது.
● இச்சோதனையின் பிரைமர் உணர்திறனும் தெளிவுத் தன்மையும் அதிகம்.
● மாசுபடுதல்/ஆவியாதல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
● இந்தச் சோதனையின் மூலம் சோதனை செய்த அன்றே முடிவுகளைப் பெறலாம். அதனால், பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளியை விரைந்து தனிமைப்படுத்தி நோய்த்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
TrueNat சோதனையில் குறைகள் என்று குறிப்பிடத்தக்க அளவில் எதுவுமில்லை. TrueNat சோதனையானது PCR தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, RT-PCR சோதனைகளில் உள்ள அதே குறைபாடுகள் இதிலும் இருக்கும்.
எல்லாச் சோதனை முறைகளுக்குமே சோதனை செய்யக்கூடிய மாதிரிகளின் எண்ணிக்கை அளவு தொடர்ந்து பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. ஆன்டி-பாடி துரிதச் சோதனைகள் (Rapid antibody tests) விரைவில் முடிவுகளை வழங்கக்கூடியவை, ஆனால் இந்தச் சோதனைகள் மூலம் அறிகுறிகளற்ற நோயாளிகளில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிய முடியாது. அறிகுறிகள் இல்லாத நோயாளியிடம் கண்கூடாகக் காணக்கூடிய அறிகுறிகள் எதுவும் தென்படாது, ஆனால் அவரால் பிறருக்கு நோய்த்தொற்று பரவக்கூடும். SARS-CoV-2 வைரஸ் உள்ளதா என்பதை நுண்மையாக ஆய்ந்து கண்டறிவதற்கு, RT-PCR மற்றும் TrueNat சோதனை போன்றவையே துல்லியமானவை. இதுவே COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கு ஒப்புதலளிக்கப்பட்ட பல்வேறு வகையான சோதனை முறைகளைப் பற்றிய விரிவான அலசலாகும்.
கருத்து
ஆன்டி-பாடி சோதனை முறையானது செலவு குறைவானது, முடிவுகளை விரைந்து வழங்கக்கூடியது, எளிதில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் குறிப்பிட்ட சூழல்களில் செய்ய உகந்த மாற்று முறை என்பதாலும் இவை நம்பகமானது மற்றும் துரிதமானது. எனவே, உலகின் பல நாடுகள் PCR அடிப்படையிலான சோதனை முறைக்கு மாறிவருகின்றன.
ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே சோதனை முறைகள் மற்றும் சோதனை செய்யப்படும் மாதிரி எண்ணிக்கையின் அளவுகளில் காணப்படும் அதிக வேறுபாட்டின் காரணமாக, நாடுகளுக்கு இடையே நோய்த்தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுவது நம்பகமான ஒரு விஷயமாக எப்போதும் இருப்பதில்லை. ஆனால், நாடு முழுதும் சோதனை செய்வதற்குத் தரப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் கருவிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
The content is verified and reviewd by experienced practicing Pulmonologist to ensure that the information provided is current, accurate and above all, patient-focused
August 26, 2023